குற்றம்

தஞ்சையில் நடைபெறும் ஹைடெக் பாலியல் தொழில்.. சிக்கும் போலி மசாஜ் சென்டர்கள்

kaleelrahman

தஞ்சையில் நடைபெறும் பாலியல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹைக்டெக்காக நடைபெறும் பாலியல் தொழில்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில இளம் பெண்ணை பூட்டி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பிறகு தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தள்ளிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முன்னாள் காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை நகர பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 4 வீடுகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இதில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்தும், ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் போலியாக மசாஜ் சென்டர் நடத்தி அதில் பாலியல் தொழில் நடைபெற்று வந்ததும் தெரிய வந்தது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தரகர்கள் மூலமாக இளம் பெண்களை கொண்டு வந்து விபச்சாரம் நடத்தியதாக மஞ்சுளா, சுரேஷ, தஞ்சை வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களும் மீட்கப்பட்டனர். இந்த சோதனையின் போது ரூ.39,080 பணம், 31 செல்போன்கள், மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போல பல இடங்களில் சமூக வலை தளங்கள் மூலம் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது.


எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.