Sriram
Sriram PT Mail
குற்றம்

எம்பிஏ படித்துவிட்டு குருவியாக செயல்பட்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் - விரைந்து காப்பாற்றிய போலீஸ்

PT WEB

காரைக்குடியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது நண்பர் அசாருதீன் என்பவர் வாட்சப் குழுக்களில் ஸ்ரீராமை தங்கக்கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் அடைத்து வைத்துள்ளதாகவும் அவரை மீட்க உதவுமாறும் புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் பகிர்ந்து இருந்தார். இந்த குறுந்தகவல் வாட்சப் குழுக்களில் பகிரப்பட்டு பூக்கடை துணை ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடனடியாக அசாருதீனை தொடர்பு கொண்டும் பேசி முழுவிவரத்தையும் பெற்றுகொண்ட காவல்துறையினர், ஸ்ரீராமின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர் பாரிமுனை உம்பர்சன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் இருப்பது போல காட்டியுள்ளது. சினிமா பாணியில் 20 மேற்பட்ட காவல்துறையினர் விடுதியை சுற்றி நின்றுள்ளனர். அங்கு மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீராமை மீட்டதோடு, காவலுக்கு இருந்த இருவரையும் கைது செய்தனர். மேலும் கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய மேலும் ஒருவர் என மூவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Jayaraj

விசாரணையில் காரைக்குடியை சேர்ந்த ஸ்ரீராம் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதும், அவர் படித்த படிப்பிற்கு வேலைக்கிடைக்காததால் நண்பர்கள் மூலமாக அறிமுகமான சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அசார் என்பவரிடம் குருவியாக செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்திருக்கிறது. குருவியாக இருந்து, அடிக்கடி பயணம் சென்று பொருட்களை கடத்தி வந்துள்ளார். அதற்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பெற்றுள்ளார். அப்படி கடந்த முறை மஸ்கட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 6 ஆம் தேதி இரவு மஸ்கட்டில் இருந்து சென்னை திரும்பிய அவர் 300 கிராம் தங்கத்தை எடுத்து வந்துள்ளார்.

மும்பை விமான நிலையம் இறங்கி சென்னைக்கு விமானம் மூலமாக செல்லமுற்பட்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அங்கே இருந்த குப்பை தொட்டியில் தங்கத்தை போட்டு சென்னை வந்துள்ளதாக கடத்தல் தலைவன் அசார் என்பவரிடம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தங்கத்திற்காக காத்திருந்த தங்கக்கடத்தல் கும்பலின் தலைவன் அசார், அதிர்ச்சியடைந்து ஸ்ரீராமை அழைத்து கொண்டு மீண்டும் விமானம் மூலமாக கொழும்பு சென்று விட்டு அங்கிருந்து விமானம் மூலமாக மும்பை விமான நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு குப்பை தொட்டியை பார்த்தபோது அதில் தங்கம் இல்லையென்றதால், சென்னைக்கு விமானம் மூலமாக கொண்டு வந்து பிராட்வே பகுதியில் உள்ள உம்பர்சன் தெருவிலுள்ள பவுசியா லாட்ஜில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளனர். கடந்த 7 ஆம் தேதி முதல் 5 நாட்கள் அடைத்து வைத்து சித்தரவதை செய்த நிலையில், உடலில் சிகரெட்களால் சூடுவைத்த காயங்களோடு காவல்துறை மீட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீராமின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தார் அவர்களது நண்பர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீராமின் செல்போன் ஆன் செய்யப்படவே, அதை தொடர்பு கொண்ட அசாருதீனிடம் ஸ்ரீராம் தயங்கி தயங்கி பேசுவதை வைத்து அவர் சிக்கலில் இருப்பதை அறிந்து கொண்டு வாட்சப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். அந்த தகவல் கிடைத்ததின் பேரில் செல்போன் எண்ணை ஆய்வு செய்து ஸ்ரீராம் பவுசியா லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறிந்து அவரை 1மணி நேரத்தில் மீட்டனர்.

Naveen

ஸ்ரீராமை கடத்தி 3 லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மொஹம்மது ஹர்சத், திருவள்ளூரைச் சேர்ந்த நவீன், ஜெயராஜ் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகமது ஹர்சத், கடத்தல் தலைவன் அசாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமறைவாக உள்ள கடத்தல் தலைவன் அசார் என்பவரை எஸ்பிளேனேடு காவல்துறை தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.