குற்றம்

சீர்காழி: பறவைகளை வேட்டையாடியதாக இருவர் கைது ரூ.40 ஆயிரம் அபராதம்

webteam

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவைகளை வேட்டையாடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட வயல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் மடையான், கொக்கு, மற்றும் பறவைகளை வேட்டையாடியவர்களை பிடிக்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில் சீர்காழி வனச் சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் தனி குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் புங்கையன் தோப்பு மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியதாக இருவர் பிடித்த வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் சத்தியராஜ் (40) மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா மகன் சுரேஷ் (37) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த வனத் துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் பறவைகளை பறிமுதல் செய்தனர்.