குற்றம்

இறப்பு காப்பீட்டு வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

webteam

இறப்பு காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம், 19 லட்சத்து 47 ஆயிரம் காப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருவாரூர் மாவட்டம் எடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் எடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜெயக்குமார் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கான இறப்பு காப்பீடு செய்திருந்தார். அதனால் அவர் இறந்த பின்னர் அவருடைய மனைவி தேன்மொழி ஸ்ரீராம் நிறுவனத்தில் காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு பல பொய்யான காரணங்களை கூறி காப்பீடு தராமல் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அவரது மனைவியை திருப்பி அனுப்பி உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மனைவி தேன்மொழி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எடுத்து விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி, இறப்பு காப்பீடு கொடுக்காமல் ஏமாற்றிய ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு காப்பீட்டுத் தொகையான 18 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வழ்ங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் மற்றும் வழக்கிற்குண்டான செலவு பத்தாயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தமாக 19 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவைபிறப்பித்துள்ளார்.