சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டரை வயது குழந்தை மற்றும் கறிக்கடைக்காரர் ஜிலானி ஆகியோரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் உட்பட 18 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பட்டம் விடுபவரை கண்டறிந்து கைது செய்யும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், தமிழகத்தில் மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் ஆன்லைன் மூலமாக பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி பறக்க விடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலமாக போலீசார் கண்காணித்த போது கடி கைட்ஸ் என்ற IDயில் பட்டங்கள் விற்பனை செய்வது தொடர்பான விளம்பரங்கள் வருவதை கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அயப்பாக்கத்தைச் சேர்ந்த பாசில் என்பவரை தீவிரமாக தேடியுள்ளனர்.
இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த பாசில் தனது செல்போனை கூவம் ஆற்றில் வீசிவிட்டு பெங்களூரு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த முகமது பாசிலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலமாக பெங்களூருவைச் சேர்ந்த இம்ரான் மற்றும் இலாஹி (எ) மன்சூர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல வருடங்களாக பெங்களூரு சிவாஜி நகரில் இருக்கும் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் மொத்த விற்பனை கடையில் வாங்கி அதை ஆன்லைன் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விளம்பரம் செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் குடோனில் மறைத்து வைத்திருந்த சுமார் 6,500 பட்டங்கள், 400-க்கும் மேற்பட்ட லோட்டாய், மாஞ்சா நூல்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.