குற்றம்

பாலியல் குற்றச்சாட்டு: தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்படுகிறார் சிவசங்கர் பாபா

நிவேதா ஜெகராஜா

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச்செல்ல சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சிவசங்கர் பாபா, டெல்லியில் தமிழக சிபிசிஐடி போலீசாரால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறியதாக சிவசங்கர் பாபா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதேநேரம் நெஞ்சுவலியால் அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் டேராடூன் விரைந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பினார். அதேநேரத்தில் அவர் டெல்லியில் இருப்பது உறுதியான நிலையில் சிபிசிஐடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

காசியாபாத்தில் வைத்து சிவசங்கர் பாபாவை அவர்கள் டெல்லி காவல்துறை உதவியுடன் இன்று காலை கைது செய்தனர். தமிழகம் அழைத்து வருவதற்காக சாகேத் நீதிமன்றத்தில் டிரான்சிட் ரிமாண்ட் பெற சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் மாலை 3.30 மணிக்கு நீதிபதி விபில் சந்த்வார் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நீதிபதி சிவசங்கர் பாபாவை, தமிழ்நாடு சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்த முழுமையான அனுமதி வழங்கினர். டெல்லியில் இருந்து இன்று இரவு அல்லது நாளை காலை அவர் தமிழ்நாடு அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.