குற்றம்

சார்ஜா டூ திருச்சி: விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 1.60 கோடி மதிப்புள்ள 3.4 கிலோ தங்கம்

kaleelrahman

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த ஐஓ 614 என்ற ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்தவர்களை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு, தூத்துக்குடி துணை இயக்குனர் பாலாஜி தலைமையில் 12 பேர் கொண்ட தனிப்படையினர் சோதனை செய்தனர்.

அப்போது விமானநிலையத்திற்கு வெளியே கடத்தல் தங்கத்தை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூன்று நபர்களை பிடித்து விமான நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர், விமானத்தில் வந்திறங்கிய சந்தேகத்துக்கிடமான, விஜய், மணிகண்டன், செல்வகுமார், கோபி, ஆகிய 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 400 கிராம் தங்கம் பிடிபட்டது.

இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த பயணியின் புகைப்படத்தை கைபேசியில் வைத்திருந்ததாக, கையும் களவுமாக பிடிபட்ட திருச்சி சுங்க துறை ஆய்வாளர் தர்மேந்திரா கைது செய்யப்பட்டார். இவரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 8 பேரிடமும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.