குற்றம்

விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

webteam

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் சீனிவாசன் (34). இவர் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்ததோடு பள்ளி மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். திருமணமாகாத இவர், அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை வெளியே சொல்ல முடியாத அந்த சிறுவன், அதே விடுதியில் தங்கி 6-ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து மாணவனின் தம்பி, இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே, மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சீனிவாசனை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்த ஆசிரியர் சீனிவாசன் எலிபேஸ்ட் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் சீனிவாசனை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஆசிரியர் சீனிவாசன், 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரிய வந்தது. இந்நிலையில், அவரை நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.