குற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: விசாரணையில் சிக்கிய ஓய்வுப்பெற்ற காவல் உதவி ஆய்வாளர்

webteam

கரூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டத்தில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். அங்கு, மூன்று பெண் புரோக்கர்கள், ஐந்து இளைஞர்கள் உட்பட எட்டு பேரை கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பெண்கள் உள்பட 8 பேரும் போக்சோ சட்டத்தின். கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் காவலர்கள் சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவலர்கள் சிலரிடம் கடந்த 2 தினங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.