குற்றம்

சென்னையில் ஒரேநாளில் 3 பேரிடம் செல்போன் பறிப்பு: ஒரேகும்பல் நடத்தியதா? போலீஸ் விசாரணை

Veeramani

சென்னையில் ஒரே நாளில் வழக்கறிஞர் உட்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா? என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் மங்கரா மண்டல் (22). இவர் கல்லூரி சாலையில் சங்கரா நேத்ராலயா மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இன்று மங்கரா மண்டல் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வழியாக பணிக்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர். இந்த பறிப்பு சம்பவம் தொடர்பாக மங்கரா அளித்த புகாரில் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதே போல் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடமாக காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து சைக்கிளில் பணிக்கு சென்ற போது ஒயிட் சாலை சுமித் சாலை வழியாக வந்தார். அப்போது ஆனந்தனை அடையாளம் தெரியாத நபர்கள் மடக்கி கத்தியால் தாக்கி விட்டு 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருபவர் ராஜசேகர் (32). இவர் இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையம் சுரங்கபாதை அருகே தனது காரை நிறுத்தி விட்டு செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள்  ராஜசேகரின் கையிலிருந்த 15ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர். இது தொடர்பாக பூக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.