குற்றம்

பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – வடமாநில இளைஞர் கைது!

webteam

பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை கைது செய்த அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

போதையில்லா தமிழகம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் ஆணை படி பல்வேறு போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்பத்தூர் மாதனங்குப்பம், எஸ்டேட் ஆகிய இடங்களில் உள்ள மாணவர்கள் மத்தியிலும், வட மாநிலத்தவர்களிடமும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக்கிற்கும், ஆய்வாளர் டில்லிபாபு ஆகியோருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் ரகசிய சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மாதனங்குப்பம் ரோடு பார்க் அருகில் வட மாநிலத்தை சேர்ந்த ஐசக் நியூம் என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நாகாலாந்து மாநிலத்தில் கிலோ 800 ரூபாய்க்கு காஞ்சாவை வாங்கி ரயில் மூலம் கொண்டு வந்து சென்னையில் மொத்தமாக விற்பனை செய்யும் நபரிடம் கிலோ 5 ஆயிரத்துக்கும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறு சிறு பொட்டலமாக விற்று வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் ஐசக் நியூம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.