மதுரை விமான நிலையத்தில் ஒரே நாளில் 46 பயணிகளிடம் 11 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8ஆம் தேதி சிங்கப்பூர், துபாய், பாங்காக், கோலாலம்பூர், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து மதுரை வந்த 46 பேரிடம் இந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 2 கோடியே 98 லட்ச ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான தங்கத்தை அதிக அளவு பயணிகள் ஒரே நேரத்தில் மதுரை விமான நிலையம் வழியாக கடத்தி வரக்கூடும் என்று வருவாய் புலனாய்வு துறையின் சென்னை பிரிவுக்கு தகவல் கிடைத்த நிலையில், மதுரை வந்த ஏர் லங்கா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் 91 பயணிகள் பரிசோதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 46 பயணிகள் சிங்கப்பூர், துபாய், பாங்காக், கோலாலம்பூர், கொழும்பு நகரங்களில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசனவாய், கைப்பை, லக்கேஜ் என பல வழிகளில் இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.