குற்றம்

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்!

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்!

Sinekadhara

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீரட்டில் உள்ள அந்த தனியார் பள்ளியில் ஆசியர்கள் கழிப்பறைக்குச் சென்றபோது அவர்களுக்கேத் தெரியாமல் ரகசிய கேமிராக்களை வைத்து, சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக் கொண்டு, சம்பளம் கொடுக்குமாறு கேட்கும்போதெல்லாம் மிரட்டி, சம்பளம் கொடுக்காமலேயே வேலை செய்யவைத்திருக்கிறார் பள்ளியின் நிர்வாகக் குழு செயலாளர்.

நீண்ட நாட்களாக இப்படியே செல்ல இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதன்படி, பள்ளி செயலாளர் மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் பள்ளிக்குச் சென்று சோதனை செய்தபோது பெண்கள் கழிப்பறையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமிராவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. ஆனால், சமீபத்தில் சில பள்ளிகளில் நடக்கும் கொலைகளை கருத்தில்கொண்டு சிசிடிவி கேமிராவை வைத்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருக்கிறது.

பள்ளி செயலாளரை விசாரித்தபோது தான் செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார். மேலும், கொரோனா பொதுமுடக்க காலத்தில் சம்பளம் கொடுக்க முடியாததால் இவ்வாறு செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் பள்ளி நிர்வாகத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை ஆசிரியர்கள் கொடுத்த புகாரின்பேரில், பள்ளி செயலாளர் மற்றும் அவரது மகன்மீது பிரிவு 504 மற்றும் பிரிவு 354(ஏ) பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சதார் பஜார் காவல் நிலைய காவல் அதிகாரி விஜயா குப்தா கூறுகையில், தடவியல் துறையைச் சேர்ந்த நபர்களும் இந்த வழக்கின் விசாரணைக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.