குற்றம்

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட 4-வது நபர் சென்னை வருகை

kaleelrahman

எஸ்பிஐ ஏ.டி.எம்-ல் நூதன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 4-வது நபர் சவுகத் அலி சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை தரமணி, வேளச்சேரி உட்பட பல பகுதிகளில் கடந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை எஸ்பிஐ ஏ.டி.எம். பணம் டெபாசிட் செய்யும் மிஷினில் நூதன முறையில் 50 லட்சம் வரை கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இது பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து தி.நகர் மற்றும் கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு சென்றனர். அங்கு ஹரியானா போலீசாருடன் இணைந்து அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நஜிம் உசேன் ஆகிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் ஹரியானாவில் 4வது நபராக சவுகத் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுகத் அலியை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுகத் அலியை போலீசார் கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து கொள்ளைச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது? அவரது கூட்டாளிகள் யார் என விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.