குற்றம்

சத்தியமங்கலம்: புலித் தோலை பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தவர் 4 பேர் கைது

webteam

சத்தியமங்கலம் அருகே கூடாரம் அமைத்து புலித் தோலை பதுக்கி வைத்திருந்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த அரசூர் கிராமத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் தங்கியிருந்தனர். சில நாட்களாக இவர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலில் பேரில் அங்கு மாறுவேடத்தில் சென்ற வனத் துறையினர் தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்டனர்.

அப்போது ஒரு சாக்குப்பையில் புலித்தோல், புலி நகம், மற்றும் எலும்புகள் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28) மற்றும் கிருஷ்ணன் (59) ராஜஸ்தானைச் சேர்ந்த ராம்சந்தர் (50) என தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடமிருந்து புலித்தோல், நகம், எலும்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் புலித் தோலை கடத்தி வந்தது எப்படி, எதற்காக தமிழ்நாட்டில் தங்கினர், இதல் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடையை பிற நபர்களை பிடித்தால் மட்டுமே இதன் சங்கிலி தொடர் தெரியவரும் வனத் துறையினர் தெரிவித்தனர்.