செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் 3 இளைஞர்கள் காட்டு புனுகு பூனையை வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நாச்சினம்பட்டியில் ஒரு வீட்டை சுற்றி வளைத்தபோது, தப்பியோடிய 3 இளைஞர்கள் இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஓமலூர் அருகே பண்ணப்பட்டி விஜயகுமார், தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி சசிகுமார் என்பதும், தப்பியோடியவர் நாச்சினம்பட்டி அருள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் காட்டுப்பகுதிக்குச் சென்று பூனையை வேட்டையாடி சமைத்தபோது கைது செய்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து 3 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜயகுமார், சசிக்குமார் ஆகிய இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அருளை தேடி வருகின்றனர்.