செய்தியாளர்கள்: ரவி மற்றும் மோகன்ராஜ்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த மலையடிவாரத்தில் அமைந்துள்ள குக்கிராமம் 74. கிருஷ்ணாபுரம். அங்கு மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தவர் தவமணி. கருத்து வேறுபாடு காரணமாக கணவர் அசோக்குமார் குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், தவமணி தன் தந்தையின் ஆதரவோடு தங்கள் விவசாய நிலத்தில் உள்ள சிறு வீட்டில் தங்கி பிள்ளைகளை படிக்க வைத்து நாட்களை கடத்தி வந்துள்ளார்..
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு:
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தவமணியை காண வந்த அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஷமருந்தியது போல் நாடகமாடிய கணவர் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தவமணியை காண வந்த அசோக்குமார், மீண்டும் அவருடன் சண்டையிட்டதாக தெரிகிறது. அதிகாலை 4 மணியளவில் பின் மண்டையில் காயத்துடன் அலறியடித்து ஓடிவந்த அசோக்குமார், அண்டை வீட்டாரிடம் தன் மனைவியையும், பிள்ளைகளையும் யாரோ வெட்டி விட்டதாகக் கூறியுள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்:
இதையடுத்து உடனடியாக வீட்டினுள் சென்று பார்த்த போது, தவமணி அவரது மூத்த மகள் அருள்குமாரி, இளைய மகள் வித்யதாரணி 5 வயது மகன் அருள் பிரகாசம் ஆகியோர் காயங்களுடன் கிடந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்குப் போராடித் துடித்துக் கொண்டிருந்த தவமணி மற்றும் அருள்குமாரி ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:
இதைத் தொடர்ந்து தலையில் அடிபட்டுக் கிடந்த அசோக்குமாரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சேலம் எஸ்.பி. கௌதம் கோயல் விசாரணை மேற்கொண்டார். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது அசோக்குமார்தான் என்பத முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் ஈவு இரக்கமின்றி வெட்டிச்சாய்த்தது அசோக்குமார்தான் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர் தவமணியின் குடும்பத்தினர்...
அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு:
காவல் துறையினரின் நீண்ட நேர விசாரணையில் அசோக்குமார் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அசோக்குமார் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடர்கின்றனர். மனைவியைப் பிரிந்து நெய்வேலியில் வசித்து வந்த அசோக்குமார், வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும், அதை துண்டித்து குடும்பத்தோடு வந்து வாழும்படி தவமணி கூறி வந்ததால் ஆத்திரத்தில் அசோக்குமார் இக்கொடூர செயலை நிகழ்த்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.