ஆத்தூரைச் சேர்ந்த வைதீஸ்வரன் என்பவர், கடைவீதிப் பகுதியில் நகைக்கடையை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு, கடை அடைக்கத் தயாராக இருந்த நிலையில், இருவர் கடைக்குள் நுழைந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் போல நடித்து, நகைகளைப் பார்ப்பது போல் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவன் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, வைத்தீஸ்வரன், அவரது மனைவி செல்வ லட்சுமி மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர் வசந்தி ஆகியோர் மீது வீசியுள்ளான்.
ஆசிட் வீச்சால் நிலைகுலைந்திருந்த நேரத்தில், கொள்ளையர்கள் உடனடியாக கடையில் இருந்த 80 பவுன் நகைகளை எடுக்க முயன்றுள்ளனர். எனினும், கடுமையான காயங்களுக்கு மத்தியிலும் வைத்தீஸ்வரன் சுதாரித்துக்கொண்டு, கொள்ளையர்களுடன் போராடி, நகைகளைப் பிடுங்க விடாமல் தடுத்துள்ளார்.
இந்தத் திடீர் போராட்டத்தால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், கையில் இருந்த ரிவால்வர் எனப்படும் துப்பாக்கியைக் காட்டி வைத்தீஸ்வரனை மிரட்டியுள்ளனர். எனினும், ஒரு கொள்ளையனை வைத்தீஸ்வரன் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தார்.
மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் வைத்தீஸ்வரனிடம் சிக்கிக்கொள்ள, மற்றொருவன் நகைகளுடன் கடைவீதி வழியாக ஓடித் தப்பிச் செல்ல முயன்றான். இதைக் கண்ட பொதுமக்கள், அவனைத் துரத்திச் சென்று ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய கொள்ளையன், துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை மிரட்ட முயன்றபோதும், மக்கள் தைரியமாக அவனைப் பிடித்து, வைத்தீஸ்வரனால் பிடிக்கப்பட்ட மற்றொருவனுடன் சேர்த்து ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கொள்ளையர்களிடமிருந்து துப்பாக்கியையும், கொள்ளையடிக்கப்பட இருந்த நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செல்வ லட்சுமி ஆகியோர் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர் வசந்திக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்கு மிக அருகில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து, ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.