குற்றம்

சேலம்: மது அருந்த அனுமதிக்காததால் முதியவரை தாக்கி ஓட்டலை தீயிட்டு கொளுத்திய கும்பல்

kaleelrahman

ஓமலூர் அருகே நள்ளிரவில் மது குடிக்க அனுமதி மறுத்ததால் இளைஞர் கும்பல் ஒன்று தாபா ஓட்டலை எரித்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள திமிரிகோட்டை பகுதியில் தாபா ஓட்டல் செயல்பட்டு வருகிறது. ஓமலூர் மேட்டூர் சாலையின் ஓரத்தில் செயல்படும் இந்த தாபா ஓட்டல், குடும்பத்துடன் வந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டு கிடந்த தாபா ஓட்டல் தற்போது தான் திறக்கப்பட்டு செயல்படுகிறது.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் பாலிகடை பகுதியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓட்டலுக்கு வந்துள்ளனர். ஓட்டல் மூடப்பட்ட நிலையில், ஓட்டலை திறந்து உணவு வழங்குமாறு மிரட்டியுள்ளனர். வயதான நபர் என்பதால் சரி என்று உணவை தயார் செய்து கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் வங்கி வந்திருந்த மதுவை அங்கேயே குடிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு அந்த வயதான முதியவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கே மது குடிக்க அனுமதி இல்லை. அதனால், அனைவரும் எழுந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் முதியவரை தாக்கிவிட்டு அவர்கள் அமர்ந்திருந்த குடிலுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், தங்களுக்கு குடிக்க அனுமதி இல்லை என்றால் இங்கே ஓட்டல் கடையே இருக்க கூடாது என்று கூறியதுடன், ஓட்டலை மட்டுமல்ல உங்களையும் கொளுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டி சென்றுள்ளனர். இதனால், ஓட்டல் கடையில் இருந்த ஒரு குடில் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. குடில் எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து மற்ற பகுதிகள் தீ பிடிக்காமல் தடுத்தனர்.

அக்கம்பக்கத்தினர் கூட்டமாக கூடியதல் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க அனுமதி மறுத்த ஓட்டலுக்கே தீ வைத்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.