குற்றம்

ஆந்திரா: அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

Sinekadhara

ஐதராபாத்திலிருந்து ஆந்திராவிற்கு அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கர்னூல் டிஎஸ்பி மகேஷ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய டிஎஸ்பி மகேஷ், இன்று அதிகாலை 4.30 மணியளவில், கர்னூல் பஞ்சலிங்கலா சுங்கச்சாவடி வழியாக வந்த வாகனங்களை கர்னூல் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விக்ரம் சிம்ஹா மற்றும் சிறப்பு தனிப்படை இன்ஸ்பெக்டர் லட்சுமி துர்கய்யா தலைமையில் சோதனை செய்தனர்.

அப்பொழுது ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது எந்த ஆதாரமும் இல்லாமல் 14.8 கிலோ எடையுள்ள கடத்தி வரப்பட்ட ரூ 6 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கடப்பா மாவட்டம் ரயில்வே கொண்டாபுரம் தாலா புரோதட்டூரை சேர்ந்த ராஜா என்பவரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தாடிபத்திரி மெயின் பஜாரில் உள்ள அம்பதி புல்லாரெட்டி ஜுவல்லர்ஸில் அவர் பணிபுரிந்து வருவதும், கடந்த 24ம் தேதி உரிமையாளர் சொன்னபடி ஐதராபாத்தில் அபிட்ஸில் உள்ள மனோ கமனா தங்கக் கடையிலிருந்து தலா 100 கிராம் எடையால் 163 தங்கக் கட்டிகள் பெற்றதாகவும், அவற்றில் 15 தங்கக் கட்டிகளை ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கியதாக தெரிவித்தார். மீதமுள்ள 148 தங்கக் கட்டிகளை ஐதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு அரசு பேருந்தில்கொண்டு வரும்போது போலீசார் பிடித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கர்னூல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 14.8 கிலோ மதிப்புள்ள 6 கோடியே 86 லட்சம் தங்கக் கட்டிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுகளான வருமான வரி, மாநில வரி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.