குற்றம்

போலி கொரோனா மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்பி கோடிக்கணக்கில் மோசடி! சென்னை தம்பதி கைது

webteam

போலியான கொரோனா மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து, ரூ.6.30 கோடி மோசடி செய்த தம்பதியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்ற நிறுவனத்திற்கு, கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்க சென்னை கீழ்கட்டளையில் செயல்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் 6,29,63,325 ரூபாயை அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சென்னை நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.

ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் போலி கொரோனா மருந்துகளை அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள நிறுவனம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரின் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.