குற்றம்

நூல் வியாபாரம் செய்யலாம் என ரூ.54 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த நபர் டெல்லியில் கைது

kaleelrahman

திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளபட்டியில் நூல் வியாபாரம் செய்யலாம் எனக்கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்த குற்றவாளியை திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார், டெல்லியில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்தவர்கள் சசிகுமார் - ராஜலட்சுமி தம்பதியர். இவர்கள் பல வருடங்களாக தலைநகர் டெல்லியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜா (47) என்பவருடன் குடும்ப ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகுமார் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான சின்னாளபட்டிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். இதையடுத்து சசிகுமார் சின்னாளபட்டியிலேயே ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருந்த ராஜா, சசிகுமாரை தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து புதிதாக நூல் வியாபாரம் செய்யலாம் என முடிவெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சசிகுமாரின் மனைவி ராஜலட்சுமி, ரூ 54 லட்சம் ரூபாயை நூல் வியாபாரம் செய்வதற்காக ராஜாவிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிச் சென்ற ராஜா, இவர்களுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், ராஜாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதனை அடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ராஜலட்சுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ராஜாவை தேடிவந்தனர்.

இந்நிலையில் ராஜா டெல்லியில் மறைந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் டெல்லிக்குச் சென்று அங்குள்ள காருள்பிளாக் என்ற இடத்தில் மறைந்திருந்த ராஜாவை கைது செய்து இன்று (08..07.22) திண்டுக்கல் அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.