குற்றம்

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி – கேரள நபர் கைது

webteam

கிணத்துக்கடவில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் பணத்தை இருட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த கேரளா மாநில நபர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் பேசிய கேரளா மாநிலம் மேனம்பாறை பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்ற நபர், தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் ஒரு தொகை கொடுத்தால் இரண்டு மடங்கு தொகையாக கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய ராஜேந்திரன் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதியில் காத்திருந்த சண்முகத்திடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்ட கேரள நபர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார், இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி மீண்டும் ராஜேந்திரனுக்கு செல்போன் மூலம் பேசிய சண்முகம் 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்தால் 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்

இதையடுத்து 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதிக்கு வந்த ராஜேந்திரன் தான் கொண்டுவந்த ரூ.5 லட்சம் பணத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சண்முகம் அதற்கு பதிலாக பெரிய பிளாஸ்டிக் கவரில் பணம் இருப்பதாகக் கூறி கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று ராஜேந்திரன் பிரித்து பார்த்தபோது கட்டுக்கட்டாக வெற்றுக் காகிதம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், தனிப்படை அமைத்து மோசடி செய்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் சண்முகம் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், சண்முகத்தை கைது செய்து அவரிடமிருந்த ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சண்முகம் பல்வேறு பகுதியில் பணம் மோசடி செய்து வந்தது தெரியவந்தது இதையடுத்து கைது செய்யப்பட்ட சண்முகத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.