பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்த வழக்கில், ஏற்கனவே மணிவேல், ரோஷன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த பூர்ணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்டு வந்தவர்கள் சிக்கியது எப்படி ?
சென்னை தி.நகரைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக வந்த, அந்தக் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி செய்பவர்கள் அனுப்பிய லிங்க் (Link) மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக வலைதளத்தில் கிளிக் செய்ததில் ஐபிஓவில் முதலீடு செய்ய சொல்லித் தூண்டியும், இணையதளம் மூலம் பங்கு வர்த்தகம் செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று மோசடி நபர்கள் கூறிய வார்த்தைகளை நம்பியும் அந்த நபர் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூபாய் 2,26,00,000 பணத்தினை டெபாசிட் செய்து இழந்துள்ளார்.
இதுகுறித்து கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், தனிப்படையினர் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 60 வயது முதியவர் சத்தியநாராயணன், மணிவேல், ரோஷன், சிம்சேன் செல்லதுரை ஆகியோர் 26.06.2025 அன்றும், ஆதனன், அப்சர் சௌகான் ஆகியோர் 11.07.2025 அன்றும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இதில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த கோயம்புத்தூர் மாவட்டம், திருவள்ளுவர் நகர், ஒண்டிபுதூர் ரோட்டைச் சேர்ந்த பூர்ணேஷ் என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு அவரை, சைதாப்பேட்டை 11வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. போலி பங்கு வர்த்தக செயலி இணைப்புகள், முதலீடு செய்யும் வலைத்தளங்கள் மற்றும் விதிவிலக்கான லாபம் என்ற பொய்யான வாக்குறுதியின் பேரில் போலி டிமேட் கணக்குகளை திறந்து, பொதுமக்களின் ஆசையை தூண்டி குறுகிய காலத்தில் பெரும் பணத்தினை சம்பாதிக்கிறார்கள்.
ஆன்லைன் மோசடிகளால், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தையும் நிதி இழப்பையும் சந்திக்கிறார்கள். பொதுமக்கள் இதுபோன்ற போலியான தொலைபேசி அழைப்புகள், அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலி முதலீட்டு செயலிகள், வலைத்தளங்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தங்களின் வங்கிக் கணக்குகளை பிறரின் பயன்பாட்டிற்கு விடக்கூடாது என்றும், போலியாக ஆவணங்கள் கொடுத்து நடப்பு வங்கிக் கணக்குகள் (Current Accounts ) ஆரம்பித்து பயன்படுத்த வேண்டாம் என்றும், தெரியாத நபர்களின் கோரிக்கையை ஏற்று வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், அறிவுறுத்தி உள்ளார்.
பொது மக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக மனுதாக்கல் செய்ய https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.