குற்றம்

ஐடி ரெய்டு: திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ.200 கோடி பறிமுதல்

webteam

திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கண்டுபிடித்துள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன், கலைப்புலி எஸ். தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, கோவை மற்றும் வேலூரில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பல ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணபரிவர்த்தனைகள், முதலீடுகள் தொடர்பான டிஜிட்டல் சான்றுகளும் கைப்பற்றபட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விநியோகஸ்தர்கள் மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேற்படி நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருமானவரித்துறை, இதில், 26 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.