குற்றம்

சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி பணமோசடி வழக்கு: 2 பிரபல நடிகைகளுக்கு சம்மன்

Veeramani

இரட்டை இலை சின்னம் பெற்றுத்தருவதற்காக் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சுகேஷ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள ரூ.200 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக, நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு இடையே ஏதேனும் பண பரிவர்த்தனை நடந்ததா என்று ஆய்வு செய்வதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஒரு வருடமாக ஒரு தொழிலதிபரிடம் 200 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 20 க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் உள்ளன.  மேலும், சுகேஷ் சிறையில் இருந்துகொண்டே நடத்திய மோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுகேஷின் மனைவி நடிகை லீனா மரியா பாலின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக 2017 ஆம் ஆண்டில் கைதான சுகேஷ் சந்திரசேகர், பல ஒப்பந்தங்களை முடித்து கொடுப்பதாக டெல்லி தொழிலதிபர்களிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பங்களா வீட்டில் டெல்லி அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாத 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம், கணக்கில் வராத 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு, பங்களாவுக்கு சீல் வைத்தனர்.