குற்றம்

போலி நகைகளை வைத்து ரூ.20.55 கோடி மோசடி : 4 பேர் கைது

போலி நகைகளை வைத்து ரூ.20.55 கோடி மோசடி : 4 பேர் கைது

webteam

சென்னையில் போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.20.55 கோடி மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர், மேற்கு விரிவாக்கம் கர்நாடகா வங்கியின் மேலாளர் மூர்த்தி என்பவர், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் "நெற்குன்றம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த ஸ்ரீராம் என்பவர் கர்நாடகா வங்கியில் 180 நபர்களுக்கு புதிய அரசாங்க திட்டத்தின் பேரில் பண உதவி செய்யப்போவதாக கூறி சேமிப்பு கணக்கு துவங்கினார். அவர் நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். 10 சவரனில் தொடங்கிய அவர், பின்பு கிலோ கணக்கில் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராம் அடகு வைத்த நகைகளை ஆய்வு செய்த போது, அவை அத்தனையும் கவரிங் நகைகள் என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி நிர்வாகிகள் நடத்திய விசாரணையில் ஸ்ரீராமுக்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளர் புண்ணியக்கோடி என்பவர் உடந்தையாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வங்கியின் முன்னாள் மேலாளர்களாக பணிபுரிந்த வசந்த செனாய் மற்றும் சுராஜ் ஆகியோரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி நகைகள் மூலம் ரூ.20.55 கோடி வரையிலும் ஸ்ரீராம் மோசடி செய்துள்ளார். ஆகவே அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆணையர் விஸ்வநாதன், மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், நகைக்கடை அதிபர் ஸ்ரீராம் அடகு வைத்த நகைகள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீராம், பத்மநாபன், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் புண்ணியக்கோடி மற்றும் சுராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.