குற்றம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

நிவேதா ஜெகராஜா

சேலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையை “வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளார் தங்கமணி” என்ற புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

சோதனையின் முடிவில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

69 இடங்களில் நடைபெற்று வரும் இச்சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம் மட்டுமன்றி 1 கிலோ 130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து கணக்கில் வராத காரணத்துக்காக ரூ.2.16 கோடி, சான்று பொருள்களான கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாமக்கலில் 33 இடங்கள், சென்னையில் 14 இடங்கள், ஈரோட்டில் 8 இடங்களில், சேலத்தில் 4 இடங்கள், கோவை, கரூரில் தலா 2 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், சோதனை இன்று மாலை 5 மணி அளவில் முடிவடைந்தது.

முன்னதாக இந்த சோதனை காலை தொடங்கப்பட்ட போது அதை அறிந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக தங்கமணியின் மகன் தரணிதரன் இல்லம் முன்பாகக் கூடி கோஷமிட்டனர். இதனால் அவர் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது சோதனை முடிந்தபோதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷம் எழுப்பினர் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.