குற்றம்

கடத்து... மாட்டு.. ரிப்பீட்டு! -மும்பை ஏர்போர்ட்டில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Sinekadhara

கடந்த இரண்டு நாட்களில் 7 பேரிடமிருந்து கிட்டத்தட்ட ரூ. 8 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் மற்றும் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் ஆகியவற்றை மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

முதல் வழக்கு: சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் EK 500 என்ற விமானத்தில் வந்த இந்தியர் ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ.5.20 கோடி மதிப்புள்ள 9.895கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ஒன்பது பாக்கெட்டுகள் கொண்ட மார்பு கச்சையில் தங்கம் பதுக்கி கொண்டுவரப்பட்டது. அந்த மார்பு கச்சையை தோள்பட்டை மற்றும் மார்புப்பகுதியை சுற்றி இறுக்கமாக அணிந்து வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த தங்கமானது இரண்டு சூடான் நாட்டைச்சேர்ந்த பயணிகளால் துபாயில் வைத்து அவரிடம் கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சூடான் பயணிகளும் பிடிபட்டனர். தற்போது 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இரண்டாம் வழக்கு: இண்டிகோ 6E 6149 விமானத்தில் சென்னையிலிருந்து மும்பை சென்ற பயணியிடமிருந்து ரூ.99.75 லட்சம் மதிப்புள்ள 1.875 கிலோகிராம் தங்கத் துகள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத் துகள்கள் நிரப்பிய பாக்கெட்டுகள் உள்ளாடையில் வைத்து தைக்கப்பட்டிருந்தது. அந்த பயணியும் கைது செய்யப்பட்டார். சென்னைக்கு முன்பு அந்த விமானம் ஷார்ஜாவில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் வழக்கு: ரூ.56,81,760 மற்றும் ரூ.58,78,600 மதிப்புள்ள 1068 கிராம் மற்றும் 1185 கிராம் தங்கத்துகள்கள் இரண்டு பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஜெட்டாவிலிருந்து சவுதியா SV 772 என்ற விமானத்தில் வந்த இரண்டு இந்திய பயணிகளிடமிருந்து இவை கைப்பற்றப்பட்டது. இவர்களும் தங்கத்துகள்கள் நிரப்பிய பாக்கெட்டுகளை தங்கள் உள்ளாடைகளில் மறைத்து கடத்திவந்துள்ளனர். இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நான்காவது வழக்கு: ரூ. 51,17,980 மதிப்புள்ள 973 கிராம் தங்கத்துகள்களை பேஸ்ட் வடிவத்தில் கொண்டுவந்த பயணி கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து EK-504 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் வந்த சூடான் நாட்டவரிடமிருந்து இது கைப்பற்றப்பட்டது. தங்கத்துகள்கள் பேஸ்ட்டை முட்டை வடிவிலாக்கி மலக்குடலில் மறைத்துக்கொண்டுவந்ததை சகப்பயணிகளே கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து மும்பை விமான நிலையத்தில் இருவேறு நபர்களிடமிருந்து வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. முதலில் மும்பையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் SG-13 விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவரிடமிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பணமான திர்ஹமை பறிமுதல் செய்தனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சினிமாவில் வருவதைப்போன்று அந்த நபர், பிஸ்கட் பாக்கெட்டின் நடுவில் வட்டவடிவில் துளையிட்டு அதில் பணத்தை மறைத்து பிஸ்கட் பாக்கெட்டை சீல் செய்து கொண்டு சென்றுள்ளார். பயணிகள் சுங்க அறிவிப்பு கவுண்டரை தாண்டி புறப்படும் பகுதிக்கு செல்லும்போது அவர் பிடிபட்டார்.



அவரைப்போலவே பிஸ்கட் பாக்கெட்டில் துளையிட்டு 45,000 திர்ஹமை மறைத்துக் கொண்டுசெல்ல முயன்ற இந்திய பயணியும் பிடிபட்டார். அவரும் ஸ்பைஸ்ஜெட் SG-13 விமானத்தில் மும்பையிலிருந்து துபாய் செல்லவிருந்த இந்திய பயணி ஆவார்.