ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரவுடி மணிகண்டன் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய மூன்று ரவுடிகளை பெருநாழி காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீரந்தை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி என்பவர் மகன் மணிகண்டன். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்.18 ஆம் தேதி அரியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் மணிகண்டன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை சாயல்குடி அடுத்த இருவேலி காட்டுப்பகுதியில் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இக்கொலையில் சம்பந்தப்பட்ட எம்.கரிசல்குளத்தை சேர்ந்த முனியசாமி மகன் மாணிக்கநாதன், கீழக்கிடாரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் உதயபிரகாஷ், மற்றும் சாயல்குடியை அடுத்த இருவேலியைச் மன்சூர் ஆகிய மூவரையும் பெருநாழி காவல்துறையினர் கைது செய்து விசாராணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் இந்த மூவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில், கொலை, வழிப்பறி, ஆட்கடத்தல் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்சியரின் பரிந்துரைப்படி மாணிக்கநாதன், உதயபிரகாஷ், மன்சூர் ஆகிய மூவரையும் பெருநாழி காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.