சென்னையில் பிரபல ரவுடியின் மாமனாரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டை ஆர் வி நகர் 6-வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் புண்ணியகோட்டி (65). இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் ஆதிலட்சுமி. ஆதிலட்சுமி தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தினேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தத் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ரவுடி தினேஷின் நண்பர் கணேஷ். இவர் குற்ற வழக்கு ஒன்றில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதையடுத்து தினேஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணேஷின் மனைவி சபிதா என்பவருடன் பழகி வந்துள்ளார். தவறான பழக்கத்தால் தனியாக வீடு எடுத்து சபிதாவை தங்க வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் நடந்த நகைபறிப்பு வழக்கில் ஈடுபட்டதாக ரவுடி தினேஷ் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கெனவே சிறைக்கு சென்ற கணேஷ் வெளியே வந்து தனது மனைவி சபிதாவை தேடினார். ரவுடி தினேஷூடன் தனது மனைவிக்கு தவறான பழக்கம் உள்ளதை அறிந்து ஆத்திரமடைந்தார். ரவுடி தினேஷின் மாமனார் வீட்டில் மனைவி சபிதா இருப்பார் என நினைத்து ஜாபர்கான்பேட்டையில் வீட்டிற்கு சென்றார். அங்கு மாமனார் புண்ணியக்கோட்டி இருந்தார். மனைவி குறித்து அவர் சரிவர பதில் கூறாததால் ஆத்திரமடைந்த கணேஷ் கத்தியால் புண்ணியகோட்டியை தலையில் வெட்டி படுகொலை செய்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கணேஷை போலீசார் தேடி வருகிறார்கள். ரவுடி தினேஷ் மீது ஏற்கெனவே பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.