ரவுடி ரேவண்ணா புதியதலைமுறை
குற்றம்

நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வந்த ரவுடி.. போலீஸ் செய்த தரமான சம்பவம் !

நீதிமன்ற வளாகத்தில் கெத்தாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வந்து மாஸ் காட்ட முயன்ற கொலைக் குற்றவாளிக்கு காவல்துறையினர் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

சண்முகப் பிரியா . செ

செய்தியாளர் : ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கொளதாசபுரம் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி இரவு இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து பாகலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், கர்நாடகம் மாநிலம் சூளகுண்டா காலனியை சேர்ந்த ரேவந்த்குமார் என்பவர் (26) கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரேவண்ணா (எ) ரோகித்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவரைக் கைது செய்து விசாரணை செய்ததில் விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரேவந்த்குமாரை கொலை செய்தது தெரியவந்து.

தனியார் நிறுவன பாதுகாவலர்கள்

இதனையடுத்து ரேவண்ணா(எ)ரோகித்குமார் மற்றும் கொலைக்கு உடைந்தையாக இருந்த 4 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து முக்கிய குற்றவாளியான ரேவண்ணா மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஒசூர் நீதிமன்றத்திற்கு கையெழுத்திட ரேவண்ணா காரில் வந்துள்ளார்.

அப்போது அவருடன் பாதுகாப்பிற்கு மற்றொரு காரும் வந்துள்ளது. இந்த கார் ஓசூர் நீதிமன்றத்தில் நுழைந்த உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாகலூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான காவலர்கள் காரை சோதனை செய்த போது, காரில் 5 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து துப்பாக்கி மற்றும் இரு கார்களை பறிமுதல் செய்து, அவர்களை நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில்ஒசூர் நீதிமன்றத்தில் கையெப்பமிட வந்த போது, ரேவந்த் குமார் தரப்பினரால் ரேவண்ணாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என பயந்து, அவருக்கு பாதுகாப்பிற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது

இதைத்தொடர்ந்து 5 கைத்துப்பாக்கியுடன் வந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 10 பேரை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.