சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் வடமாநில இளைஞரை படுகொலை செய்து விட்டு தப்பியோடிய வழிப்பறி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுதீப் நாத் என்பவர் பணி முடித்துவிட்டு கண்ணகி நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள், அவரை வழிமறித்து பணம் மற்றும் மொபைல் போனை கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் ஆவேசமடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுதீப்பை கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுதீப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.