குற்றம்

வீட்டு வேலை பார்த்து சேர்த்த பணம் - மூதாட்டியிடம் நைசாக பேசி 10 சவரன் சங்கிலி திருட்டு

PT WEB

சென்னை தியாகராய நகரில், காவலர் சாவடி அருகிலேயே மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 10 சவரன் நகைகள் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த சுலோச்சனா என்ற 72 வயது மூதாட்டி, தியாகராய நகர் பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். அவர் வடக்கு உஸ்மான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சிலர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இதனால் செய்வதறியாது கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த மூதாட்டியை அவ்வழியே வந்தவர்கள் பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்கச் செய்தனர்.

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இதுபோல வயதானவர்களை குறிவைத்து கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால் இது போன்ற கொள்ளை சம்பவ இடங்களை கண்டறிந்து அங்கு ரோந்து பணியை காவல்துறை தீவிரப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையில் தனியாக நடந்து செல்லும் முதியவர்கள், தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் என்றும், தனியாக வெளியே செல்வதாக இருந்தால் உடன் யாரையாவது அழைத்து செல்லும் படியும் யார் மீதாவது சந்தேகம் இருந்தால் காவல் எண் 100க்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.