குற்றம்

காட்டிக் கொடுத்த கேமரா... கொள்ளையரின் நெஞ்சை உருக்கும் வள்ளல் குணம்..!

காட்டிக் கொடுத்த கேமரா... கொள்ளையரின் நெஞ்சை உருக்கும் வள்ளல் குணம்..!

Rasus

குப்பை பொறுக்குபவர் போல வீடுகளுக்குள் புகுந்து திருடி வந்த கொள்ளையன், நீண்ட தேடுதலுக்குப் பின் பிடிபட்டார். தலைமறைவாக இருந்த திருடன் காவல்துறையின் பிடியில் சிக்கியது எப்படி என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை தரமணியைச் சேர்ந்தவர் சக்திவேல். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு முதலில் இருந்தே அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சக்திவேல் தனக்கென்று தனி பாணியை வைத்துக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. குப்பை பொறுக்குவதைப் போன்ற தோற்றத்தில் குடியிருப்புகளைச் சுற்றிவரும் சக்திவேல், ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்துவிடுவார்.

பின்னர் வீடுகளில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு நைசாக எஸ்கேப் ஆவதை பாணியாக சத்திவேல் கொண்டிருந்துள்தாக தெரிவிக்கின்றனர் காவல்துறையினர். சென்னையில், பாரிமுனை, மயிலாப்பூர், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பல‌‌ ஆண்டுகளுக்கு மேலா‌க திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சக்திவேலை பிடிப்பது காவல்துறையினருக்கு சற்று சிரமமாக இருந்து வந்திருக்கிறது. 4 காவல் மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் சக்திவேலை தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு‌ தேடும் பணியை துரிதப்படுத்தியபோதும், சக்திவேல் காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அவரை பிடிப்பதற்காக யானைகவுனி காவல் ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே சக்திவேல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையினரிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக, பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து, இரவு நேரத்தில் சாலையோர நடைபாதையில் தங்கி வந்ததாக சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திருடிய நகைகளையும், பணத்தையும் கொண்டு நடைபாதையில் வசிப்பவர்களுக்கும், குப்பை பொறுக்கு‌பவர்‌களுக்கும் பல்வேறு உதவிகளை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார் சக்திவேல். அவரிடம் இருந்து 9 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொருட்களை மீட்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.