நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 3,85,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற சுதாகர் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2 பேர் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கோயம்பேடு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பூனை பிரகாஷ், நொளம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி கோயம்பேடு கீரை மார்க்கெட் பகுதியில் தனியார் நிறுவன கலெக்ஷன் ஏஜெண்டு ஊழியர் லோகேஷ் என்பவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் வழிப்பறி செய்து 5 லட்சம் ரூபாய் பறித்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட பூனை பிரகாஷ் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்றவர் என்பதும் தெரிந்தது. மேலும் அவர் மீது கொடுங்கையூர், விருகம்பாக்கம், பெரவள்ளூர் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான மற்றொருவரான விஜய்குமார் 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்றதும் பல நகைப்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இவர்களது கூட்டாளியான விஜய், ராகுல், ராஜேஷ் ஆகியோரையும் கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமும் இருந்து 40 சவரன் தங்க நகைகள், 3,85,000 ரூபாய் பணத்தையும், 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளை கும்பல் தலைவனான பன்னீர்செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.