குற்றம்

அரை மணி நேர கொள்ளை முயற்சி -அனைத்தும் தோல்வி - 2 பேர் கைது

அரை மணி நேர கொள்ளை முயற்சி -அனைத்தும் தோல்வி - 2 பேர் கைது

webteam

அரை மணி நேரம் பூட்டை உடைக்க முயற்சித்தும் பூட்டை உடைக்க முடியாத கொள்ளையர்களின் முயற்சி நகைச்சுவை மிகுந்ததாக மாறியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், தெற்கு லட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(53). இவர் படப்பை பத்திரபதிவு அலுவலகத்திற்கு அருகே பத்திரங்கள் தட்டச்சு செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல கடந்த 20 ஆம் காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனை காலை முதலே நோட்டமிட்டுக் கொண்டிருந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டு அவர் சென்றதும் சரியான நேரம் பார்த்து மதியம் 2.30 மணி அளவில் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்தது.

வீட்டுப் பூட்டை ஒரு நபர், கட்டடங்களில் ஆணியை பிடுங்க பயன்படுத்தும் கம்பியை வைத்து உடைக்க முயற்சிக்க, மற்றொரு நபர் வீட்டின் வெளியே நின்று நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். அரைமணி நேரம் முயற்சித்தும் அந்த நபரால் வீட்டின் பூட்டை உடைக்க முடியவில்லை. அடுத்ததாக பூட்டை உடைக்கும் நபருக்கு உதவி செய்யும் வகையில் மற்றொருவர் வீட்டினுள்ளே குதித்து உதவ முயற்சித்தார். இருவரும் என்னவெல்லாம் செய்து பார்த்தார்கள். ஆனால் பூட்டு உடைந்த பாடியில்லை.


இறுதியில் அவர்கள் பூட்டை உடைக்கும் சத்தம் ஊருக்கே கேட்டு விட்டது. ஊர்க்காரர்கள் ஒன்று கூடி சத்தம் போடவே கொள்ளையடிக்க வந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர். இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கன்கரணை காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசாருக்கு அதனை பதிவு செய்ய பென் டிரைவ் தேவைப்பட்டதால் அதனை வாங்க ஹம்ரு என்ற இளைஞர் கடைவீதிக்குச் சென்றுள்ளார். அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை கண்டு அவர்களை பின் தொடர்ந்த இளைஞர் அவரை பொதுமக்கள் உதவியுடன் போலீஸாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை கைது செய்தனர்.


விசாரணையில் அவர்கள் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த பாபி(எ) சஞ்சய்(21) மற்றும் அம்பத்தூரை சேர்ந்த கலைசெல்வன்(எ) ஜான்சன்(29) என்ப து தெரிய வந்தது. இதில் கலைச்செல்வன் மீது கொள்ளை சம்பவம் தொடர்பாக ஐந்து வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்கரணை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.