குற்றம்

பிரபல நகைக் கடையில் கொள்ளை - சில மணி நேரங்களில் ஒருவர் கைது: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

webteam

தாம்பரம் அருகே ப்ளுஸ்டோன் தங்க நகைக்கடையில் கொள்ளைப்போன வழக்கில் கொள்ளையன் சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ப்ளுஸ்டோன் தங்க நகைக் கடையில் மர்ம நபர் இன்று அதிகாலை கொள்ளையடிக்க பைப் வழியாக ஏறிச் சென்று கடைக்குள் இறங்கி கொள்ளையடித்துள்ளார்.

கடையில் திருட்டு நடப்பது குறித்து மேலாளர் ஜெகதீசன் என்பவருக்கு தகவல் சென்றுள்ளது. உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கபட்டு சேலையூர் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில நபர் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் அப்பகுதி முழுவதும் தனிப்படை போலீசார் சோதனையிட்டு அருகில் சுற்றித் திரிந்த நபரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் அருகில் ரோஸ் மில்க் கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், நகைக் கடைக்கு எதிரே உள்ள தெருவில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையில் கொள்ளைப் போன நகைகளின் விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என சொல்லப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.