குற்றம்

”சார்.. 100 ரூபாய் நோட்டுங்க கீழ கெடக்குது” - ஏடிஎம் ஊழியரிடம் கொள்ளை.. கைதான ஆந்திர நபர்!

webteam

திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஏடிஎம் ஏஜென்ட்டிடம் நூதன முறையில் ரூ.2.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் இட்டாச்சி எனப்படும் தனியார் ஏடிஎம்-மில் பணம் நிரப்பும் ஏஜென்டாக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11-தேதி இந்தியன் வங்கி திருவாலங்காடு கிளையில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு அதனை திருவாலங்காடு அரக்கோணம் சாலையில் உள்ள இட்டாச்சி ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்றுள்ளார். ஆனால் 80 ஆயிரம் ரூபாயை மட்டும் நிரப்பிய அவர் அங்கிருந்து மீதமுள்ள 2 லட்சத்து 10 ஆயிரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 100 ரூபாய் பத்து ரூபாய் மற்றும் ஐடி கார்டு கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோபி இறங்கி தேடிய போது வாகனத்தில் வைத்திருந்த 2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மர்ம அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோபி இருசக்கர வாகனத்தில் பின்னால் விரட்டி சென்றும் பிடிக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து கோபி திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான கட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த ஓ ஜி குப்பம் பகுதியைச் சேர்ந்த அங்கையன் என்கிற சுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.