தியாகராய நகர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எனக்கூறி நகைக்கடை ஊழியரிடம் 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வரும் லட்சுமணன் என்பவர் 9 சவரன் நகையுடன் ஹால்மார்க் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, தியாகராய நகர் மங்கேஷ் தெரு பகுதியில் அவரை மறித்த நான்கு பேர், தங்களை தேர்தல் அதிகாரிகள் என கூறி அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அவர்கள் கலைந்துசென்ற நிலையில் பின்னர் லட்சுமணன் தனது பையில் பார்த்தபோது நகைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடினர். அப்போது சிசிடிவியில், 4 பேர் லட்சுமணனை சுற்றி வளைக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. பிறகு சோதனை செய்வது போல நகைகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. பிறகு 4 பேரும் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. போக்குவரத்து மிகுந்த சாலையில் தேர்தல் அதிகாரிகள் போல நடித்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.