சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரும் டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் மருதுகணேஷ் மற்றும் அதிமுக சார்பில் மதுசூதனன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். டிடிவி தினகரனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே. நகர் பகுதியில், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடைபெறும் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பேரில் தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் சிக்கிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.