மதுரையில் மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்த இருவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள உத்தங்குடி பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இதயத்துல்லா (50) என்பவர், கடந்த 11ஆம் தேதி தலை, மூக்கு, காது ஆகியவற்றில் இரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார்.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், அடுத்த நாள் 12ஆம் தேதியன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் யாசகராக இருந்துவந்த ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பழனி (45) என்பவர் தலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், கடந்த 15ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இரு சம்பவங்களையும் கொலை சம்பவமாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை காவல் துறையினர் விசாரணை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மற்றும் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகத்துக்குரிய வகையில் அலைந்து திரிந்த மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் (28) என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது இளைஞர் சதிஸ்குமார் அளித்த வாக்குமூலத்தில் மது போதைக்கு அடிமையாகிய அவர், மது குடிக்க பணம் இல்லாத நிலையில் சாலைகளில் செல்பவர்களிடம் பசி எனக் கூறி பணத்தை பெற்று அந்த பணத்தில் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்துள்ளார்.
இதேபோன்று கடந்த 11ஆம் தேதியன்று மதுரை உத்தங்குடி பகுதியில் உறங்கிகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த இதயத்துல்லா (50) என்பவரிடம் மது குடிக்க 30 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சதீஸ்குமார் இதயதுல்லாவின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், இதனைத் தொடர்ந்து அடுத்த நாளே பழனி (45) என்ற யாசகரிடம் மது அருந்த 50 ரூபாய் கேட்டு தர மறுத்த நிலையில் அவரையும் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து மது குடிப்பதற்காக 80 ரூபாய் கேட்டு இருவரை கொலை செய்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.