குற்றம்

நாகை: கோயில் கணக்கில் வராமல் இருந்த பழங்கால சோழர் காலத்து வெண்கல சிலைகள் மொத்தமாக மீட்பு!

webteam

நாகப்பட்டினத்தில் உள்ள கோயிலில் இருந்து கணக்கில் வராத மூன்று பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா பண்ணைத் தெருவில் அமைந்துள்ள பன்னகா பரமேசுவர சுவாமி திருக்கோவில் கோயிலின் பிரகாரத்தில் உள்ள ஆலமரத்தில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் இருப்பதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

அங்கு மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அலமாரியை கண்டுபிடித்து, அலமாரியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அதற்குள் மூன்று பழங்கால சிலைகள் இருப்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்தனர்.

மூன்று பழங்கால வெண்கல சிலைகளின் விவரம்:

1.வள்ளி (உலோக சிலை):- உயரம்-38.5 செ.மீ., அகலம்-16 செ.மீ., எடை - 7.3 கிலோ.

2.புவனேஸ்வரி அம்மன்:- உயரம்-30 செ.மீ., அகலம்-13 செ.மீ., எடை- 6.2 கிலோ,

3.திருஞான சம்பந்தர்:- உயரம்-43 செ.மீ. அகலம்-12 செ.மீ. எடை- 9.4 கிலோ.

இந்த சிலைகள் வெளியே எடுக்கப்பட்ட பிறகு, கோயில் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டன. ஆனால் கோயிலில் பராமரிக்கப்படும் எந்தப் பதிவேட்டிலும் மேற்கூறிய சிலைகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. கோயிலின் செயல் அலுவலருக்கும் சிலைகள் இருப்பது தெரியாமல் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், மூன்று சிலைகளும் கோயிலுக்குச் சொந்தமானதா என்று சந்தேகத்தின் பெரில் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலின் விநாயகர் சிலை திருட்டு போனது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே கோவிலின் திருடப்பட்ட தேவி சிலை சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள சோதேபியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1970 மற்றும் 1973 க்கு இடையில் 48.3 செமீ உயரமுள்ள சிலையை சோதேபிஸ் நியூயார்க் வாங்கியது. ஏல நிறுவனம் சமீபத்தில் அதை US$ 50000 (ரூ. 40,99,227) -க்கு விற்றது. நிபுணரின் கூற்றுப்படி, கணக்கில் வராத மூன்று சிலைகளும் 12 முதல் 15 ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்தைச் சேர்ந்த உயர் மதிப்புடையவை.

சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக் குழுவினர் மூன்று சிலைகளை  கைப்பற்றி, எஸ்ஐ தண்டாயுதபாணியின் புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை தற்போது இன்ஸ்பெக்டர் இந்திரகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட உலோக சிலைகள் கும்பகோணம்  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டன. பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ- பிரெஞ்சு நிறுவனத்தில் கணக்கில் வராத சிலைகளின் படங்கள் உள்ளனவா என்பதை சரிபார்க்க  திட்டமிட்டுள்ளது. சிலைகள் எந்தெந்த கோயில்களுக்கு சொந்தமானது என்பதை அறிய, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நாடுகிறது.