செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ளது கே.வெளூர் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான கோகுல் (20), மணி (19) ஆகிய இருவர் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோகுலுக்கு 6 தையல் போடும் அளவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கோகுல் தனது நண்பர்களான தொப்பளான் (எ) லோகேஷ் (20), லக்ஷ்மணன் (23) ஆகியோருடன் இணைந்து மது போதையில் மணியை பழி தீர்க்கும் நோக்கில் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீயிட்டு மணி வீட்டின் மீது வீசியுள்ளனர். இதில், வீட்டின் கதவு எரிந்ததுடன் வீட்டின் இருந்த துணி மணிகளும் எரிந்து சேதமானது.
இது தொடர்பாக மணியின் தந்தை அண்ணாமலை கலவை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரில் கோகுல், லோகேஷ், லக்ஷ்மணன் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தன் தலையில் படுகாயம் ஏற்படுத்தியதாக கோகுல் கொடுத்த புகாரில் மணியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.