173 கிலோ கஞ்சா பறிமுதல் pt desk
குற்றம்

ராமநாதபுரம் | இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.26 லட்சம் மதிப்பிலான 173 கிலோ கஞ்சா பொட்டலங்களை மரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, பாசிபட்டினம், மோர்பண்ணை, சோழியாக்குடி, மணக்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட இருப்பதாக தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மணக்குடி அருகே ஓடகரை முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனம் நிறுத்திய போலீசார், சோதனை செய்தனர்.

Arrested

அதில், மூன்று சாக்கு மூட்டைகளில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (61) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கஞ்சா பொட்டலங்களை கடல் வழியாக நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் சில கஞ்சா பொட்டலங்கள் மணமேல்குடியில் உள்ள வீடு ஒன்றில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சரக்கு வாகனத்தில் இருந்து 90 கிலோ கஞ்சா மற்றும் மணமேல்குடி வீட்டில் இருந்த 83 கிலோ கஞ்சா உள்ளிட்ட 173 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் போலீசார், அதை தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து வாகன ஓட்டுனர் ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 173 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.26 லட்சம் இருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.