குற்றம்

கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்

நிவேதா ஜெகராஜா

ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு வட மாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றது. இங்குள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழில் பிரதானமாக செய்து வருவதோடு, இப்பகுதி பெண்கள் கடலுக்குச் சென்று கடல் பாசி சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது மதிப்புடைய பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.

கடல் பாசி சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திரா என்ற மீனவப் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்ற போது இறால் பண்ணை அருகே மீனவ பெண் சந்திராவை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உயிரிழந்த மீனவ பெண் சந்திராவின் உடலை மறைக்கும் நோக்கத்தோடு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து உடலை எரித்துள்ளனர். அதில் சந்திராவின் உடல் நிர்வாணமாக அரைகுறையாக எரிந்து கிடந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்று மாலை 4 மணிக்கு வீடு திரும்ப வேண்டிய சந்திரா வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடல்பகுதியில் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த காவலர்கள் உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் அப்பெண்ணை தேடியுள்ளனர். முதலில் அவருடன் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரித்த போது கடந்த இரண்டு நாளுக்கு முன்பு இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வட மாநிலத்திலத்தவர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இறால் பண்ணை அமைந்துள்ள பகுதியில் தீவிரமாக கிராம மக்கள் மற்றும் போலீசார் தேடியபோது கடல் பாசி சேகரிக்க கொண்டுசென்ற கண்ணாடி, சாப்பாட்டு பாத்திரம் உள்ளிட்டவற்றை முதலில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உடலில் துணி இல்லாமல் அரைகுறையாக எரிந்த நிலையில் சந்திரா கிடந்ததை கண்டு பிடித்துள்ளனர். அந்த நிலையில் சந்திராவை கண்ட அவரது உறவினர் மற்றும் மீனவ கிராம மக்கள், ஆத்திரத்தில் இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன் அதில் பணியாற்றிய ஆறு வடமாநிலத்தவர்கள் தான் சந்திராவை கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சரமாரியாக 6 பேர்களை தாக்கி அவர்கள் பயன்படுத்தி வந்த இரண்டு இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடல், உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் 6 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா என்று தெரியவரும் என்றும் தெரிவித்தார். உயிரிழந்த சந்திராவிற்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளதோடு அதில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் மேலும் ஒரு பெண் திருமணமாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.