குழந்தையை கொலை செய்த மாமன் pt desk
குற்றம்

ராமநாதபுரம் | குழந்தையை கொடூரமாக கொலை செய்த மாமன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பரமக்குடி அருகே குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

பரமக்குடி எமனேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டெய்சி என்ற மனைவியும், இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை குழந்தை லெமோரியா தனது மாமா சஞ்சய் என்பவருடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சஞ்சய், குழந்தையை வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து துண்டித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள ஊரணியில் வீசியுள்ளார். தகவல் அறிந்த எமனேஸ்வரம் போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஊரணியில் வீசப்பட்ட தலையை மீட்டனர். இதைத் தொடர்ந்து மாமன் சஞ்சய் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சஞ்சாய்யின் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை, உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமின் பெறுவதற்காக வழக்கறிஞர் தேசிங்குராஜா உதவியுள்ளார். அப்போது சஞ்சய், மனநலம் பாதித்தவர் என மருத்துவச் சான்று பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சஞ்சய்-யை அவரது உறவினர்கள் பைத்தியம் என கூறி கேலி செய்துள்ளனர்.

Arrested

இதனால் வழக்கறிஞர் தேசிங்குராஜாவை பழிவாங்க நினைத்த சஞ்சய், கஞ்சா போதையில் குழந்தையை கொடூரமாக கொலை செய்ததாகக் கூறியுள்ளார். பரமக்குடி மக்களை பதபதைக்க செய்த இந்த கொடூரக் கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.