குற்றம்

பக்தர் தானமாக வழங்கிய ஐம்பொன் சிலை மாயம்! வேறு சிலையை வைத்துவிட்டு திருடர்கள் கைவரிசை!

ச. முத்துகிருஷ்ணன்

ராமநாதபுரத்தில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் பக்தர் நேர்த்திக் கடனுக்காக தானமாக வழங்கிய ஐம்பொன் சிலைக்கு பதிலாக வேறு சிலையை வைத்துவிட்டு திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு நேர்த்திக் கடனுக்காக ஐம்பொன் சிலை ஒன்றை கோவிலுக்கு வழங்கியிருக்கிறார்.

அந்த சிலை கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் இருந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அந்த சிலை காணப்படவில்லை. இது குறித்து சிலர் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் திருஉத்திரகோசமங்கை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் குறித்து திருஉத்திரகோசமங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை காணாமல் போயுள்ளது. அதற்கு மாற்றாக வேறு சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை மாற்றிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.