குற்றம்

ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்குள் எங்கும் செல்லலாம் - மோசடி வழக்கில் ஜாமீன் தளர்வு

webteam

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பலாஜி தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என ஜாமீன் தளர்வு வழங்கியது உச்சநீதிமன்றம்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதால் அதிமுக பொதுகுழுவில் கூட அவரால் கலந்து கொள்ளமுடியாமல் போனது.

இந்நிலையில் வழங்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.பி பர்திபாலா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை எனவே இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கூடாது என தமிழக காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட பிறகும் இப்போது வரை அவரிடம் எந்த விசாரணையும் நடத்த அழைப்பு விடுக்கவில்லை, அப்படியெனில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்கா? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமின் தொடரும் எனவும், ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்று அவரது இடைக்கால ஜாமின் நிபந்தனைகளை தளர்வு செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ராஜேந்திர பாலாஜி தமிழக முழுவதும் பயணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

மேலும் வழக்கு விசாரணை நடைபெறும் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும், ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வெளிமாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் தளர்வு வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை முன்வைத்த போது, அதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் காவல்துறையின் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறினர்.

அதேபோல் சாட்சிகளையோ, புகார் தாரர்களையோ எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனவும் வழக்கு தொடர்பான விஷயங்களை கலைக்க முற்படக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.