பளார்... பளார்... பளார்... இப்படி ஒரு முறையல்ல... 26 முறை மாறிமாறி அறைந்து குடிகார இளைஞரின் கன்னத்தைப் பழுக்க வைத்திருக்கிறார் ஒரு பெண். ஓடும் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் காணொளி நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
புனே மாநகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த குடிகார இளைஞர் ஒருவர், பக்கத்து இருக்கையில் இருந்த பெண் பயணி ஒருவரை அநாவசியமாகத் தொட்டு, சீண்டியிருக்கிறார். இரண்டாவது முறை அவர் தொட்டபோது, சினம் கொண்ட வேங்கையாக மாறி, அந்த இளைஞரை பளார் பளார் என கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் அந்தப் பெண்.
சட்டைக்காலரைக் கொத்தாகப் பிடித்தபடி, வலது கையால் நான்கு அறை, இடது கையால் நான்கு அறை என்று மாறி மாறி அடித்ததில் அந்த இளைஞருக்குப் பொறி கலங்கியது. ஒரு கட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டபடி மன்னிப்பு கேட்டார் அவர்.
ஆனாலும், அந்தப் பெண் அடிப்பதை நிறுத்தவே இல்லை. மொத்தம் 26 முறை ஆத்திரம் தீர அறைந்த பிறகு, “என்னங்க எல்லாரும் வேடிக்கை பார்க்கிறீங்க?” என்று நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரிடம் கேட்க, அவர்களும், நான்கு சாத்து சாத்தி அந்த குடிகார இளைஞரை சனிவார்வாடா (Shaniwarwada) காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அந்தப் பெண்ணைப் பாராட்டிய காவல்துறையினர், “யாரம்மா நீ? என்று கேட்க, “என் பெயர் பிரியா லஸ்கரே. உடற்கல்வி ஆசிரியை” என்று சொல்லியிருக்கிறார் அவர். “கணவர் மற்றும் குழந்தையுடன் பயணித்த என்னிடமே ஒருவர் அத்துமீறுகிறார் என்றால், தனியே செல்லும் பெண்களின் நிலை என்ன? பேருந்தில் எனக்கு நடந்த அத்துமீறலை சக பயணிகளும், பெண்களும் பார்த்தும்கூட உதவ முன்வராதது வருத்தமளிக்கிறது. இனியாவது இதுபோன்ற விஷயத்தில் பெண்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரியா.